Saturday, 20 September 2014

‘செயற்கை’ மனைவி!

‘செயற்கை’ மனைவி!

  
 



விஞ்ஞான தொழில்நுட்பத்தின் அசாத்திய வளர்ச்சி, செயற்கையையும் இயற்கையுடன் ஒன்றிணைத்துவிடும் அளவுக்கு ஆச்சரியப்பட வைக்கும் கண்டுபிடிப்புகளின் கூடாரமாக இருக்கிறது. குறிப்பாக, செயற்கையான மனித உறுப்புகள் உருவாக்கப்பட்ட வண்ணம் இருக்கின்றன. அந்த வரிசையில் இணைந்திருக்கிறது செயற்கைப் பெண் பொம்மை. ஆனால் இது பார்ப்பதற்கு பொம்மை போல் தெரியாததுதான் சிறப்பம்சம். அச்சு அசலாக பெண்ணை போன்ற தோற்றத்தில் ஜப்பானிய நிறுவனம்  ஒன்று பொம்மைகளை வடிவமைத்து அசத்தி இருக்கிறது.

பொம்மை விற்பதில் முன்னணியில் வகிக்கும் ஒரியன்ட் தொழிற்சாலையின் புதுவரவாக இந்த பொம்மைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த பொம்மையின் தோல் பகுதியும், கண்களும் நிஜ பெண்களை போலவே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதனால் இந்த பொம்மைகளை பார்ப்பவர்கள் நிஜ பெண்கள் என்றே நினைத்துவிடுவார்கள். அந்த அளவுக்கு தத்ரூபமாக கண்ணைக் கவரும் வகையில் அழகான தோற்றத்துடன் இந்தப் பெண் பொம்மைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்த பொம்மைக்கு ‘செயற்கை மனைவி’ என்று அந்த நிறுவனம் பெயரிட்டுள்ளது. இந்த பொம்மைகள் வாங்குபவர்களின்  விருப்பத்திற்கேற்ப பல்வேறு உயரங்களை கொண்டிருக்கின்றன. தற்போது ஜப்பானில் மட்டும் இந்தப் பொம்மைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஜப்பானிய இளம் ஆண்கள் இந்தப் பொம்மைகளை விரும்பி வாங்கிச் செல்வதாகவும், விரைவில் வெளிநாடுகளுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளதாகவும் ஒரியன்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Friday, 19 September 2014

செல்லப்பிராணிகளுக்கான சலூன்: விதவிதமான வண்ணங்களில் வலம் பூனைகள்


செல்லப்பிராணிகளுக்கான சலூன்: விதவிதமான வண்ணங்களில் வலம் பூனைகள்

 

முடிகளில்  விதவிதமான வண்ணங்களில் டை, நேர்த்தியான முடிவெட்டு, இதுதான் தற்போது ரஷ்யாவில் செல்லப்பிராணிகளுக்கான பேஷன்.
செல்லப்பிரணிகளுக்காகவே ரஷ்யாவில் பிரத்யேகமாக தனி சலுன் உள்ளது என்றால் நீங்கள் நம்புவீர்களா? ஆமாம் நம்பித்தான் ஆக வேண்டும்  விதவிதமான கலர்களுடன் ஒரு வித்தியாசமான உருவங்களில் தற்போது ரஷ்யாவில் பூனைகள் மற்றும் நாய்கள் உள்ளிட்ட விலங்குகள் வலம் வருகின்றன. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் இதை செல்லப்பிராணிகளும் ரசிப்பதாக கூறுவதுதான்.

ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள யெகேடின்பர்க் நகரத்தில் செல்லப்பிரணிகளுக்கான சலூன் உள்ளது. அதன் உரிமையாளர் டாரியா கோட்ஸ்  தனது சலூனில் அலங்கரிக்கப்பட்ட ஒரு பூனையை காண்பித்தார். பச்சை வண்னத்தில் அழகாக முடிவெட்டுடன் அது டிரகன் போலவே காட்சி அளிக்கிறது. அதேபோன்று வண்டு போன்ற நிறம் கொண்ட நாய்குட்டியையும் காண்பித்தார்.

இந்த சாயங்கள்  அடிப்பதனால் விலங்குகளுக்கு அது பின் விளைவுகளை ஏற்படுத்தாது என்று உறுதி பட தெரிவித்தார். ஏனெனில் இது தாவர சாற்றில் இருந்து தயாரிக்கப்பட்ட இயற்கையான சாயமாகும் என்றார்.

அந்த சலூன் கடைக்கு வந்த செல்லப்பிராணிகளின் உரிமையாளர் ஒருவர் கூறுகையில், எங்கள் நாயை ஒரே மாதிரியாக பார்த்து எங்களுக்கு சலித்து விட்டது. எனவே எங்கள் நாயை நாங்கள் அழகுபடுத்த நினைத்தோம். அதற்கு ஒரு தேனீ போன்று சாயம் பூசினோம். தற்போது மிகவும் வண்ணமயமாக அழகாக உள்ளது.

ஆனால் விலங்குகளுக்கு இது போன்று வண்ணச்சாயங்கள் பூசக்கூடாது என்று விலங்குகள் நல ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Wednesday, 17 September 2014

ஏரோபிக் பயிற்சியால் குழந்தைகள் நினைவாற்றல் கூடும்: ஆய்வு

ஏரோபிக் பயிற்சியால் குழந்தைகள் நினைவாற்றல் கூடும்: ஆய்வு

 

சமீபத்தில் வெளிவந்த ஆய்வு ஒன்றில், ஒன்பது முதல் பத்து வயதிலுள்ள குழந்தைகளுக்கு ஏரோபிக் பயிற்சி மூலம் கற்றுக்கும் திறனும், நினைவாற்றலும் அதிகரிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு அமெரிக்காவிலுள்ள இலினொய் பல்கலைக்கழகம் (அர்பானா சாம்பேன்), ஒன்பது முதல் பத்து வயதிலுள்ள 48 குழந்தைகளிடம் நடத்தப்பட்டது. அவர்களிடம் ஒரு கற்பனையான வரைபடத்திலுள்ள பெயர்களையும் இடங்களையும் நினைவில் கொள்ளமாறு கூறினர். அதனை நினைவுக்கூர்ந்து கூறுகையில், உடற்பயிற்சி செய்து நல்ல ஆரோக்கியமாக இருக்கும் குழந்தைகளின் நினைவாற்றல் மற்ற சாதாரண குழந்தைகளை விடவும் அதிகமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டது.
குழந்தைகள் படிக்கும் விதத்தை ஆய்வு செய்கையில், ஆரோக்கியமான குழந்தைகளுக்கும் சாதாரண குழந்தைகளுக்குமிடையே நிறைய வேறுபாடுகள் இருப்பதாகத் தெரியவந்தது.
இந்த ஆய்வின் மூலம், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கல்வி கற்கும் திறன், நினைவாற்றல் அதிகரிக்க, ஏரோபிக் பயிற்சிகள் நல்ல பலன் அளிக்கும் என்பது ஆய்வாளர்களின் கருத்து.
இதனைத்தொடர்ந்து, குழந்தைகளிடம் படிக்கும்போது நிகழும் நரம்பியல் செயல்முறைகளைப் பற்றி ஆய்வு செய்யவிருப்பதாகக் கூறுகின்றனர், இலினொய் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள்.

 

Monday, 15 September 2014

ஆங்கிலச் சொற்களுக்கான இணையதளம்

ஆங்கிலச் சொற்களுக்கான இணையதளம்

 

 
 
 
 
உலகில் அதிகமாகப் பேசப்படும் மொழிகளில் மாண்டரின், ஸ்பானிஷ் மொழிகளுக்கு அடுத்து மூன்றாமிடத்தில் ஆங்கிலம் இருக்கிறது. உலகில் 42 கோடியே 70 லட்சம் பேர் ஆங்கிலத்தை முதல் பேச்சு மொழியாகவும், 90 கோடி பேர் ஆங்கிலத்தை இரண்டாம் பேச்சு மொழியாகவும் கொண்டிருக்கின்றனர். 57 நாடுகளில் ஆங்கிலம் அரசு மொழியாக உள்ளது.
உலகப் பொதுமொழி
ஆங்கிலத்தை முதலாவது உலகப் பொதுமொழி என்று கூட அழைப்பதுண்டு. பல்வேறு நாடுகளின் பயன்பாட்டிலுள்ள மொழிகளிலிருக்கும் பல சொற்களை உள்வாங்கிக் கொண்டு, பல புதிய ஆங்கிலச் சொற்கள் உருவாக்கம் பெற்றிருக்கின்றன.
ஆங்கில மொழியிலுள்ள பல்வேறு சொற்கள் குறித்துப் பல்வேறு தகவல்களைத் தரும் இணையதளம் ஒன்று இருக்கிறது.
இந்த இணையதளத்தில் ஒரு சொல்லை உள்ளீடு செய்து அந்தச் சொல்லுக்கான மாற்று சொல் (Another Word), எதிர்ச் சொல் (Opposite Word) கண்டறிவதற்கான வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன.
இது போல் ஒரு சொல்லை உள்ளீடு செய்து சொல்லின் பொருள் (Word Meaning), ஒலி இயைபுடைய சொற்கள் (Rhyming Words), உள்ளீடு செய்த சொல்லைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் எடுத்துக்காட்டு வாக்கியங்கள் (Example Sentences) போன்றவற்றைக் கண்டறிய முடியும்.
மொழிமாற்றம் (Translate) எனுமிடத்தில் சொடுக்கினால் நாம் ஆங்கிலச் சொல் ஒன்றினை உள்ளீடு செய்வதற்கான பெட்டி ஒன்று உள்ளது. இதையடுத்துள்ள பெட்டியில் ஆங்கிலத்திலிருந்து, ஆங்கிலத்திற்கு என்று இரு தேர்வுகள் தரப்பட்டிருக்கின்றன. மூன்றாவது பெட்டியில் 28 மொழிகளின் பட்டியல் இடம் பெற்றிருக்கின்றன.
இவற்றின் மூலம் ஆங்கில மொழி சொல் ஒன்றை உள்ளீடு செய்து 28 மொழிகளுக்கான மாற்று மொழிச் சொல்லைக் கண்டறிய முடியும்.
கண்டறிதல்
சொற்களைக் கண்டறிதல் (Find Words) எனுமிடத்தில் சொடுக்கினால், மூன்று தேர்வுப்பட்டியலுக்கான பெட்டிகள் கிடைக்கின்றன. இங்கு முதல் பெட்டியில் ஆங்கில எழுத்துகளில் 2 எழுத்துகள், 3 எழுத்துகள், 4 எழுத்துகள் என்று 10 எழுத்துகள் வரையிலான தேர்வுக் குறிப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. இரண்டாவது பெட்டியில் தொடங்கும் (Starting with), முடிவடையும் (Ending with), இடம் பெற்றிருக்கும் (Containing) எனும்
மூன்று தேர்வுகள் இடம் பெற்றிருக்கின்றன. மூன்றாவதாக இருக்கும் பெட்டியில், நமக்குத் தேவையான ஆங்கில எழுத்துகளை உள்ளீடு செய்வதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. இங்கு நாம் குறிப்பிட்ட ஆங்கில எழுத்துகளை
மட்டும் உள்ளீடு செய்து, அருகிலுள்ள கண்டறி (Find it) எனுமிடத்தில் சொடுக்கினால், நம் தேர்வுக்கேற்ப பல்வேறு சொற்கள் பார்வைக்குக் கிடைக்கின்றன.
உச்சரிப்பு
சொல் வடிவங்கள் (Word Forms) எனுமிடத்தில் சொடுக்கினால், இரு பெட்டிகள் பார்வைக்குக் கிடைக்கின்றன. முதல் பெட்டியில் பன்மை (Plural), ஒருமை (Singular), கடந்த காலம் (Past Tense), நிகழ்காலம் (Present Tense), வினைச்சொல் (Verb), உரிச்சொல் (Adjective), வினையுரிச்சொல் (Adverb), பெயர்ச்சொல் (Noun) எனும் தேர்வுக் குறிப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.
இதில் தேவையானதைத் தேர்வு செய்து, இதற்கடுத்துள்ள பெட்டியில் ஆங்கிலச் சொல்லை உள்ளீடு செய்து தேவையானதைக் கண்டறிய முடியும்.
சொற்களை உச்சரித்தல் (Pronounce Words) எனுமிடத்தில் சொடுக்கினால், திறக்கும் பெட்டியில் சொல்லை உள்ளீடு செய்தால் அதை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று உச்சரித்துக் காண்பிக்கிறது. இதற்கு அடுத்திருக்கும் பெயர்கள் (Names) எனுமிடத்தில் சொடுக்கினால், இரு பெட்டிகள் பார்வைக்குக் கிடைக்கின்றன.
இங்கு முதல் பெட்டியில், பெயரின் வேர் (Origin of the Name), பெயர்களின் பொருள் (Names Meaning), பெயர்கள் தொடக்கத்துடன் (Names Starting with), வேர்களின் பெயர்கள் (Names of Origin) எனும் தேர்வுக் குறிப்புகள் உள்ளன. அடுத்த பெட்டியில் சொல்லை உள்ளீடு செய்து தேவையானதைக் கண்டறிய முடியும். இதை
http://www.wordhippo.com/ எனும் இணைய முகவரிக்குச் சென்று நீங்கள் பார்க்கலாம்.

 

Wednesday, 10 September 2014

இளைஞர்கள் மத்தியில் பரவி வரும் ரிங்டோன் போபியா!

இளைஞர்கள் மத்தியில் பரவி வரும் ரிங்டோன் போபியா!




 

திருச்சி: ஏதோ ஒரு சூழ்நிலையையோ, பொருளையோ கண்டு பயப்படுவதற்குப் பெயர் ஃபோபியா. போபியாக்களில் பல வகை உண்டு. அதில் சமீப காலமாக இளைஞர்கள் மத்தியில் வலம் வரும் போபியாவாக மாறிவருகிறது ரிங்டோன் போபியா. நீங்கள் ஒரு விஷயத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறீர்கள். அது நடக்காவிட்டால் என்ன ஆகும்? டென்ஷன் ஏற்படும், பதற்றம் உருவாகும், கோபம் வரும். செல்போன் போபியாவிலும் இதே பிரச்சினைதான். செல்போன் அழைப்பு வந்தது போல ஒரு உணர்வு மனதில் அல்லாடிக் கொண்டிருக்கும். வாகனத்தில் செல்லும்போது வைப்ரேஷன் மோடில் வைத்திருந் தாலும்கூட வைப்ரேஷன் ஏற்பட்டது போன்ற ஒரு உணர்வுவரும்.

உடனே செல்போனை எடுத்துப் பார்ப்போம். இல்லை என்று தெரிந்ததும் சிலருக்குச் சலிப்பு ஏற்படலாம். ஒரே நாளில் பலமுறை இப்படி நிகழ்ந்தால் நம்மை அறியாமலேயே டென்ஷன், பதற்றம், கோபம், முரட்டுத்தனம், படபடப்பு ஏற்படுவது இயற்கைதானே. இது நாள் கணக்கிலோ, மாதக் கணக்கிலோ, ஆண்டுக் கணக்கிலோ தொடர்ந்தால் செல்போனைக் கண்டாலோ எரிச்சல் வந்துவிடும். இந்தப் பிரச்சினைக்குச் சரியான சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல், கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் ஒரு கட்டத்தில் மனநோய்கூட ஏற்படலாம் என்று ஒரு ஆய்வு எச்சரிக்கிறது.

இன்று செல்போன் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்று சொல்லு மளவுக்கு எல்லோர் வாழ்விலும் இரண்டறக் கலந்துவிட்டது. அப்படியானால், ரிங்டோன் போபியாவைத் தவிர்க்க வழியே கிடையாதா? இருக்கிறது. அதற்குச் செல்போன் பயன்பாட்டைக் குறைப்பதுதான் ஒரே வழி. இப்போது எந்த அளவுக்குச் செல்போனைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோமோ அதைப் பாதியாகக் குறைக்க வேண்டும். இன்று இளைஞர்கள்தான் அதிகளவில் செல்போனைப் பயன்படுத்துகிறார்கள். எனவே, அவர்கள் இந்த விஷயத்தில் எச்சரிக்கை உணர்வுடன் இருப்பது நல்லது. ஒரு வேளை அடிக்கடி டென்ஷன், பதற்றம், படபடப்பு ஏற்பட்டால் மருத்துவரை அணுகத் தயங்கக் கூடாது என ஆய்வு கூறுகிறது.

ரிங்டோன் போபியா மட்டுமல்ல செல்போனை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவதன் மூலம் வயது, பாலினத்துக்கு ஏற்றவாறு பல நோய்கள் உருவாகி வருகின்றன. செல்போனைப் பொறுத்தவரை அதிலிருந்து வரும் கதிர்வீச்சால் மூளை அதிகம் பாதிக்கப்படுகிறது . செல்போன் கதிர்வீச்சு மூலம் 20 சதவீதம் முதல் 60 சதவீதம்வரை நோய்கள் ஏற்படுகின்றன.செல்போன் கதிர்வீச்சு மூலம் மூளைப் பகுதியின் அருகில் உள்ள காது நரம்புகளில் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இது காதுகேளாத் தன்மையை உருவாக்கிவிடும். இதனால் மூளையில் புற்றுநோய் கட்டிகள் ஏற்படுமா என்பது குறித்துத் தற்போது ஆய்வுகள் நடைபெற்றுவருகின்றன. மூளை பாதிக்கப்படுவதால் வயதானவர்களுக்கு வரும் ஞாபக மறதி எனப்படும் அல்சைமர் நோய் வர வாய்ப்பு உள்ளது. உடல் நடுக்க நோய் எனப்படும் பார்கின்சன் நோய் ஏற்படுமா என்பது குறித்தும் ஆய்வுகள் தொடர்கின்றன.

நரம்பியல் தொந்தரவாகத் தலைவலிப் பிரச்சினை ஏற்படலாம். தோள்பட்டையில் செல்போனை வைத்துச் சாய்ந்தபடி பேசுவதால் தோள்பட்டை வலி, கழுத்து வலியும் ஏற்படும் ஆபத்து உள்ளது. செல்போனில் இருந்து வரும் மின்காந்தக் கதிர்வீச்சு காரணமாக மூளை நரம்பு செல்கள் பாதிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று குழந்தைகள், சிறுவர், சிறுமிகள்கூடச் செல்போனைச் சாதாரணமாகப் பயன்படுத்துகிறார்கள். பொதுவாக வளர்ந்த பிறகே மூளை முழு வளர்ச்சியை எட்டும். சிறுவர்கள், குழந்தைகளுக்கு மண்டையோடு மெலிதாகவே இருக்கும். இவர்கள் செல்போனைப் பயன்படுத்தினால் முதுமைக் காலத்தில் ஏற்படும் பல பாதிப்புகள் சிறு குழந்தைகளுக்கும் ஏற்படலாம்.

பொதுவாகச் செல்போன் சூடாகும் வரை பேசுவதைத் தவிர்ப்பது நம்மைக் காக்கும். செல்போனைக் காதுகளுடன் ஒட்டிவைத்துப் பேசாமல் இருப்பதும் நல்லது. ஹெட்போன், புளூடூத், ஸ்பீக்கர் மூலம் பேசினால் கதிர்வீச்சு பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம். செல்போனை அளவாகப் பயன்படுத்தினால் அல்லல் இன்றி வாழலாம்.

 


பால்வள தொழில் துறையில் பரவலான வேலை வாய்ப்புகள்

 

 

உலகிலேயே அதிக பால் உற்பத்தி செய்யும் நாடாக திகழும் இந்தியா உலகின் மொத்த பால் உற்பத்தியில் 16 சதவீதம் பங்களிப்பை கொண்டுள்ளது. அதிகரிக்கும் வாழ்க்கை வசதிகள், நகர்மயமாதல் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் போன்றவை இந்தியாவில் முறைப்படுத்தப்பட்ட பால்வளத்துறையின் வளர்ச்சியை ஆண்டுக்கு 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரிக்கின்றன.

இதுபோன்ற சாத்திய கூறுகளை காணுகையில் இதர பிற துறைகளை விட சிலருக்கு பால்வளத்துறையின் மீது அதிக ஆர்வம் ஏற்படுகிறது. ஏனெனில், மக்கள் இன்று பாக்கெட்டுகளில் விற்கப்படும் பால் உள்ளிட்ட இதர பால் பொருட்களை அதிகளவில் வாங்குகின்றனர். எனவே இது தொடர்பான படிப்புக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது.

* எம்.டெக்., டெய்ரி டெக்னாலஜி படிப்பு:

இப்படிப்பு பி.டெக்., படிப்போடு ஒப்பிடுகையில், சற்று மாறுபட்ட ஒன்றாகும். பால் ப்ராசஸிங் மற்றும் பால் உற்பத்தி பொருட்கள் தொடர்புடையதாக இப்படிப்பு விளங்குகிறது. குறிப்பிட்ட தயாரிப்பு பொருட்கள் மற்றும் அதன் ப்ராசஸிங் தொடர்பான விஷயங்கள் தொடர்பாக இப்படிப்பு கவனம் செலுத்துகிறது.

அதே சமயம், பி.டெக்., படிப்பு பால் சேகரிப்பு மற்றும் அதை தொடர்ந்த அதன் ப்ராசஸிங் மற்றும் பல்வேறான பால் பொருட்கள் தயாரிப்பு, பால் பொருட்கள் தொடர்பான வேதியியல் மற்றும் மைக்ரோபயாலஜி துறைகளில் சிறப்பு கவனம் மேற்கொள்ளுதல், அப்பொருட்களை தயாரித்தல் மற்றும் சந்தைப்படுத்தலில் பயன்படுத்தப்படும் சாதனங்கள் ஆகியவை தொடர்பானதாகும்.

* மாணவர்கள் கற்று கொள்வது என்ன?

டெய்ரி தொழில்நுட்பம், உணவு தொழில்நுட்பம், பால் மற்றும் பால் பொருட்களின் உயிர்சிதை மாற்றம், சவ்வு தொழில்நுட்பம், ஆரோக்கிய உணவுகளின் நன்மைகள், பால் மற்றும் தொடர்புடைய பொருட்களின் உணர் மதிப்பாய்வு மற்றும் சிலவகை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நுட்பங்கள் ஆகியவற்றை மாணவர்கள் கற்றுக் கொள்ளலாம்.

* அம்சங்கள்:

அனிமல் பயோடெக்னாலஜி, விலங்கு சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு, பண்ணை விலங்குகள் உற்பத்தி பெருக்கம் ஆகியவற்றுக்கு உதவி புரிகிறது. மேலும், எம்ப்ரயோ, ஜெனோமிக்ஸ் அண்ட் ப்ரோடோமிக்ஸ் ஆகியவற்றை பற்றிய படிப்பை இது உள்ளடக்கியது ஆகும். பண்ணை விலங்கு குளோனிங் என்பது, விலங்குகளுக்கு உணவளிக்கும் ப்ரோகிராம்களை மேம்படுத்துகிறது மற்றும் கால்நடைகளுக்கென்று ஆரோக்கியமான, பாதுகாப்பான மற்றும் உயர்ரக உணவை உற்பத்தி செய்ய பயன்படுகிறது.

* பணி வாய்ப்புகள்:

இப்படிப்பு முடித்த பிறகு ஒரு மாணவர், டெய்ரி கம்பெனிகள், பால்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள், உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள், பால் சாதன உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் டெய்ரி பிளாண்டுகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிக்கு சேரலாம்.

* பணி நிலைகள்:

ஒரு தயாரிப்பு யூனிட் என்று எடுத்துகொண்டால் இப்படிப்பை முடித்தவர் தயாரிப்பு மேலாளராகி டெய்ரி பிளான்டில் தயாரிக்கப்படும் பொருட்களின் உற்பத்தியை மேற்பார்வையிடுகிறார். அதே சமயம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு தொடர்பான நிறுவனங்களில் குவாலிட்டி கன்ட்ரோல் அதிகாரி மற்றும் குவாலிட்டி அசூரன்ஸ் ஆபிசர் அண்ட் ரீசர்ச் அண்ட் டெவலப்மென்ட் மேலாளர் போன்ற பணி நிலைகளை பெறுகிறார். ஒரு குவாலிட்டி நிபுணராக ப்ளேவர், பாடி ஸ்ட்ரெக்சர், கெமிக்கல் அண்ட் மைக்ரோ பயாலஜி குவாலிட்டி ஆப் தி ப்ராடக்ட் ஆகியவற்றை அவர் சோதிக்கிறார். மேலும், ப்ரோக்யூர்மென்ட் பிரிவாக இருந்தால் ப்ரோக்யூர்மென்ட் மேலாளராக பணியாற்றுவார்.

* சவால்கள்:

பால் பொருட்கள் தரமான முறையில் சுகாதாரமாக தயாரிக்கப்படுவதை உறுதி செய்வது தான் இத்துறையின் மிகப்பெரிய சவால். தரமான பாலை பெறுவது இந்தப் பணியின் முக்கிய புகார்களில் ஒன்று. ஒரு பொருள் தயாரிக்கப்படும் போது அதற்கான செயல்பாட்டு முறையை தெளிவாக தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம். அப்போது தான் தேவையில்லாத இழப்புகளை தவிர்க்க முடியும்.

* எம்.டெக்., டெய்ரி டெக்னாலஜி படிப்பை வழங்கும் முக்கிய கல்வி நிறுவனங்கள்:

நேஷனல் டெய்ரி ரீசர்ச் இன்ஸ்டியூட், கர்னல் - கேரளா, வெர்ட்டினரி அண்ட் அனிமல் சயின்ஸ் யுனிவர்சிட்டி - திருவனந்தபுரம், காலேஜ் ஆப் டெய்ரி சயின்ஸ் - உதய்பூர், வெஸ்ட் பெங்கால் யுனிவர்சிட்டி ஆப் அனிமல் அண்ட் பிஷரி சயின்ஸ், பேகல்டி ஆப் டெய்ரி டெக்னாலஜி, டெய்ரி சயின்ஸ் இன்ஸ்டியூட் - மும்பை, ஜவஹர்லால் நேரு க்ரிஷி விஷ்வா வித்யாலயா - ஜபல்பூர், ஆச்சார்யா என்ஜி ரங்கா அக்ரிகல்சுரல் யுனிவர்சிட்டி.

* வேலைவாய்ப்பு வழங்கும் சில முக்கிய கல்வி நிறுவனங்கள்:

மேனுபேக்சரெர்ஸ் லைக் அமுல், நெஸ்ட்டில், ஜிஎஸ்கே, மதர் டெய்ரி, ஐடிசி, பிரிட்டானியா, பார்லே, வெர்கா டெய்ரி, எஜுகேஷனல் இன்ஸ்டியூசன்ஸ்.

பொது இடங்களில் புகை பிடித்தால் அபராதம் ரூ.20 ஆயிரமாக உயரும்?

பொது இடங்களில் புகை பிடித்தால் அபராதம் ரூ.20 ஆயிரமாக உயரும்?




புதுடெல்லி,

பொது இடங்களில் புகை பிடிப்பதற்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு தடை விதிக்கப்பட்டது. அப்படி புகை பிடிப்போருக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், புகை பிடிப்பதை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய சுகாதார அமைச்சகம் ஒரு கமிட்டியை அமைத்தது. அக்கமிட்டி, மத்திய அரசிடம் தனது அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.அதில், பொது இடங்களில் புகை பிடிப்போருக்கான அபராத தொகையை ரூ.200-ல் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்று சிபாரிசு செய்துள்ளது.

மேலும், புகை பிடிப்பதை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், உதிரியாக பீடி, சிகரெட் விற்பதற்கு தடை விதிப்பது பற்றி மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

வேலை கிடைக்கத் தேவையான திறன் என்ன?

வேலை கிடைக்கத் தேவையான திறன் என்ன? 

 

 

சென்னையில் புகழ் பெற்ற அந்த சாப்ட்வேர் கம்பெனி மிகவும் பரபரப்பாக இருந்தது. இளம் ஆண்கள், பெண்களின் நீண்ட வரிசை. கேப்டன் பிரபாகரன் ரேஞ்சுக்கு செக்யூரிட்டி மிரட்டிக்கொண்டிருந்தார். “இன்டர்வியூவுக்கு வந்தவங்கள்லாம் லைன்ல நில்லுங்க.. பைக்கை வெளியே விடுங்க சார்.
பயோடேட்டா எடுத்து வெளில வச்சிக்குங்க. எப்படி டிரஸ் பண்ணிகிட்டு வருதுங்க பார். இதுங்கள்லாம் எப்படி முன்னேறப் போகுதோ? போன்லாம் உள்ள எடுத்துட்டு போகக் கூடாது சார்” என சுட்டெரிக்கும் வெயிலில் அவர் வேறு சுட்டுக்கொண்டிருந்தார்.
“என்னடா நடக்குது இங்கே” என்று வடிவேலு ஸ்டைலில் எனக்குள்ளேயே கேட்டுக்கொண்டு, கார் கண்ணாடி வழியே பார்த்துக்கொண்டே உள்ளே நுழைந்தேன். “இன்னிக்கு இன்டர்வியூ சார். அதான்” என்றார் ரிசப்ஷனிஸ்ட்.
அந்தக்கால இன்டர்வியூ
20 வருஷத்துக்கு முன்னாடி ப்ளாஷ் பேக். அப்பாவின் நண்பர் கம்பெனியில் இன்டர்வியூ. அப்பாவின் நண்பர் ஒரு பெரிய சேர்ல உக்காந்திருக்கார். வேலைக்கு வந்தவங்கள்ல சிலர் ரிசப்ஷன்ல உக்காந்திருக்காங்க. கழுத்தில சுருக்கு மாட்டிகிட்ட மாதிரி சிலர் ‘டை நாட்’ கூட சரியாம போடாம, சிலர் தொப்பைக்கு கீழே தொங்கற மாதிரியும், சிலர் மொத்தமா வயிற்றுக்கு மேலயும் ‘டை’ கட்டிக்கிட்டு இருக்காங்க. பல வருடம் கழிச்சி பாலிஷ் போட்ட ஷூ... இப்படித்தான் இன்டர்வியூக்கு வந்திருக்காங்க.
ஒரு இன்டர்வியூன்னா 10-12 பேர் இருந்த காலம். ஓரளவுக்கு கேள்வி இப்படித்தான் கேப்பாங்கன்னு முன்னமே தெரிஞ்சி ரெடி பண்ணிகிட்டு வந்துடலாம். மிஞ்சி மிஞ்சி என்ன கேப்பாங்க? What is your name? What is your background? ஏன் மார்க் கம்மி? 3-4 தலைநகரம் பேர் சொல்லு, இந்த நாட்டோட பிரதமர் யாரு, அவரைப் பத்தி சொல்லுங்க... இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.
இந்தக்கால இன்டர்வியூ
கவனத்தை தற்காலத்திற்கு கொண்டு வந்து எதிரே கவனித்தேன். இன்டர்வியூவுக்கு வந்திருந்த இரண்டு மாணவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்.
“டேய், ஐஸ் பக்கெட் சேலஞ்ச்ங்கறாங்களே என்னடா அது.?” உடன் வந்த நண்பன் வெறுப்பாய் அவனைப் பார்த்து, “ரொம்ப முக்கியம். என்னடா Succession Plan அப்படின்னா என்னடா? அதை முதல்ல பாரு” என்றான் வேண்டா வெறுப்பாய். மெல்ல இருவரும் முனகிக்கொண்டிருந்தார்கள்.
“ வேலைக்கு ஆள் வேணும்னு Ad பார்த்ததிலிருந்து உயிர் போகுதுடா. நாம ஒரு பயோ டேட்டா ரெடி பண்ணி கம்பெனிக்கு அனுப்புறோம். அதை டைப் பண்ணவன் Careerக்கு பதிலா Carierன்னு டைப் பண்ணி வச்சிருக்கிறான். Career னா உங்களோட வாழ்க்கைப் பாதை. Carier நீங்க ஓட்ற சைக்கிளோட காரியர்னு சொல்லி பயோ டேட்டா திரும்பி வந்திருச்சி.
அப்படியே இந்த பயோ டேட்டா உள்ள போனா, முதல்ல Aptitude Test வைக்கறாங்க. என்னடா இந்த டெஸ்ட்னு பார்த்தா அதுல Quantitative Test யாம், Reasoning Ability, Verbal Ability யாம். இது எல்லாத்திலியும் எனக்கு IQ, EQ எப்படின்னு test பண்ணி பாப்பாங்களாம்.
சரி அதை நான் பல புத்தகங்களை படிச்சி சமாளிச்சிறேன்னு வச்கிக்கோ. அதுக்கப்புறமும் வேலை கிடைச்சிதா.? GD ன்னு ஒண்ணு வைக்கறாங்க. 15 நிமிஷம். 6 பேர். 15க்கும் மேற்பட்ட திறன்களை டெஸ்ட் பண்றாங்க.
பேசணுங்கறாங்க. பேசிட்டே இருந்தாலும் தப்பு, பேசாம இருந்தாலும் செலக்ட் பண்றாங்க. கொஞ்சமா பேசினாலும் செலக்ட் பண்றாங்க. ஒரு வார்த்தை பேசினா இல்லைங்கறாங்க. தலை சுத்துது. இதை தாண்டி நேர்முகத் தேர்வுக்கு போனா tell me about yourself னு ஆரம்பிச்சி கேள்வியை சரமாரியா கேக்கறாங்க. நானும் பல புக் படிச்சி பல சினிமாக்களை பார்த்து.
ஏற்கனவே வேலை கிடைச்சவங்களோட அனுபவத்தை வச்சி பேச ஆரம்பிச்சி, அம்மா, அப்பா, குடும்பம்னு சொல்ல ஆரம்பிச்சா உங்கள பத்தி கேட்டா உங்க அப்பா அம்மாவ யார் கேட்டா? நீ எப்படிப்பட்டவன்? அதைச் சொல்லு. உன் ஆட்டிட்யூட் பத்தி சொல்லுன்னு ஏதோ ஒரு புரியாத பாஷைல கேக்கறாங்க.
அதையும் சமாளிச்சி வேலை கிடைச்சா “Fresh man induction.” communication, thinking skills” அப்படி இப்படின்னு என் ப்ராஜக்ட் மேனேஜர் 15 நாள் ட்ரெய்னிங் கொடுப்பாராம்;. அதையும் முடிச்சி வேலைக்கு சேர்ந்தா மூணு மாசத்துக்கு ஒரு தரம் Skill Assesmentன்ற பேர்ல என்னதான்டா கண்டுபிடிப்பாங்க,,, அப்படின்னு புலம்பித்தள்ளினான் அந்த மாணவன்.
வேலைக்கான சவால்
அது ஒரு தனி மனிதப் புலம்பல் அல்ல. வேலை தேடப்போகும், தேடிக்கொண்டிருக்கும் அனைவரின் கவலை. இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கும் இது ஒரு சவால். இல்லையென்றால் அவர்கள் திவால்.
“ உன் வேலையைச் சிறப்பாகச் செய். உயிருடன் இருப்பவர்களோ, இறந்தவர்களோ, இன்னும் பிறக்காதவர்களோ இதைவிடச் சிறப்பாகச் செய்ய முடியாது என்னும் அளவுக்குச் சிறப்பாகச் செய்.” மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் சொன்னார். அதைப்போல், வாழ்க்கையை அமைக்க வழி என்ன ?
வேலை கிடைப்பதற்கும், வேலையை திறம்படச் செய்வதற்கும் இன்றைக்கு அனைத்துத் தரப்பினருக்கும் ஒரு திறன் தேவைப்படுகிறது. அடுத்ததாக அதை நாம் அலசுவோம். கட்டுரையாசிரியர் ரைப் அகாடமியின் இணை நிர்வாக இயக்குநர்.

ஆப்பிள் வாட்ச்: அறிய வேண்டிய 10 அம்சங்கள்

ஆப்பிள் வாட்ச்: அறிய வேண்டிய 10 அம்சங்கள்

 


  

ஸ்மார்ட் ஃபோன் தொழில்நுட்பத்தில் உச்சத்தை எட்டிய ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் 9ஆம் தேதி ஐஃபோன் 6 மற்றும் ஐஃபோன் 6 பிளஸ் ஆகிய புதிய வகையை சந்தையில் அறிமுகம் செய்தது. இப்போது மேலும் ஒரு நூதனத்தைப் புகுத்தியுள்ளது. அதுதான் ஆப்பிள் வாட்ச்.

1. ஆப்பிள் வாட்சின் தொடக்க விலை 349 அமெரிக்க டாலர்கள், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பரவலாக இது கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த வாட்ச் ஐஃபோன் 5, 5c,5s,மற்றும் 6 பிளஸ் ஆகியவற்றுடன் வேலை செய்யுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.






2. ஆப்பிள் வாட்ச் சஃபையர் கண்ணாடி முகப்புடன் தட்டையான திரை அமைப்பு கொண்டது. மேலும் சிறப்பாக ‘டிஜிட்டல் கிரவுன்’ என்ற திருகுக் கட்டுப்பாடு கொண்ட ஒன்றின் மூலம் பல்வேறு செயல்பாடுகளை ஸ்க்ரோல் செய்து அணுகுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் கிரவுன் என்பது ஸ்க்ரோல் சக்கரம் போல் செயல்படும் ஒன்று. மெனுக்கள், மெசேஜ்கள் ஆகியவற்றை எளிதில் ஸ்க்ரோல் செய்ய முடிவதோடு புகைப்படம், மேப்கள் ஆகியவற்றை ஜூம் செய்ய முடியும். மேலும் இது ஒரு பொத்தான் போலவும் செயல்படும். சாதாரண வாட்சில் கீ கொடுக்கும் சிறு பொத்தான் போல் இருக்கும் இதனை அமுக்கினால் முகப்புத் திரைக்கு மீண்டும் வந்து விடலாம்.














3. ஆப்பிள் வாட்சின் மற்றொரு சிறப்பம்சம் 'கைரோஸ்கோப்' (gyroscope), மற்றும் இன்றைய நவீன மொபைல்களின் சிறப்பம்சமான ஆக்சிலரோமீட்டரின் உயர் தொழில்நுட்ப வசதிகள் உள்ளது. ஆட்டோ ஸ்க்ரீன் ரொடேஷனுக்கு ஆக்சிலரோமீட்டர்கள் பெரும்பாலும் பயன்படுகின்றன. இதன் மற்றொரு நவீனப் பயன்பாடு மொபைல் மியூசிக் பிளேயரைக் கட்டுப்படுத்துவதாகும்.
மேலும் மொபைல் கேம் பயன்பாடுகளில் எதற்கெடுத்தாலும் கீ-யைஅழுத்தாமல் மொபைல் கருவியை ஆட்டி அசைத்து பயன்படுத்த உதவுகிறது. மேலும் இது, பயனாளர்களின் ஐஃபோனில் உள்ள ஜிபிஎஸ், மற்றும் வை-ஃபை தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தூரத்தையும் கணக்கிட உதவுகிறது.









4. ஆப்பிள் வாட்ச் ஒரு வாக்கி-டாக்கியாக, டிராயிங் பேடாக, நாடித் துடிப்பு அறிய உதவும் கருவியாகவும் கலோரி கணக்கீடு செய்யும் கருவியாகவும், ஆக்டிவிட்டி டிராக்கராக பல பயன்பாடுகள் கொண்டது. ஆப்ஸ்களை செயல்படுத்துவதோடு, டிக்டேஷன் எடுத்துக் கொள்கிறது, மேலும் ஐஃபோனுடன் இணைந்து செயல்படுகிறது.










5. Siri என்ற தானியங்கி குரல் கட்டுப்பாட்டு அமைப்பை ஆப்பிள் வாட்ச் ஆதரிக்கிறது, பேச்சு வடிவ கேள்விகள் மற்றும் கட்டளைகள் வழியாக உரையாட இது வழிவகுக்கிறது.





6. ஆப்பிள் வாட் எடிஷன் என்ற பிரத்தியேக மாடல், 18 காரட் தங்கத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட் வாட்ச் 2 மாதிரிகளில் வருகிறது: ஆப்பிள் வாட்ச், ஆப்பிள் வாட்ச் ஸ்போர்ட்.





7. இந்த முறை, முக்கியமாக ஆப்பிள் பே (apple pay) என்ற புதிய வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆப்பிள் பே மூலம், வாடிக்கையாளர்கள் தங்களது கிரெடிட், டெபிட் கார்டுகளை, தங்கள் ஐஃபோன்களில் பதிவு செய்து கொண்டால், அதை வைத்தே பண பரிமாற்றங்களை விரைவாகவும், பாதுகாப்போடும் செய்ய முடியும். இந்த வசதி தற்போது, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், மாஸ்டர் கார்ட் மற்றும் விசா ஆகிய தளங்களில் மட்டும் வேலை செய்யும். முதற்கட்டமாக அமெரிக்காவில் மட்டும் செயல்படுத்தப்படும் இந்த அம்சம், விரைவில் உலகளவில் அறிமுகம் செய்யப்படும்.






8. புதுப்பிக்கப்பட்ட iOS 8 பிளாட்பார்மில் ஆப்பிள் வாட்ச் இயங்கும். இதன் மூலம் அனைத்து ஆப்பிள் கருவிகளை ஒத்திசைவுடன் சிறப்பாக இயங்கச் செய்ய முடியும். உதாரணத்திற்குக் கூற வேண்டுமென்றால், ஐஃபோனில் ஒரு உரையாடலைத் தொடங்குகிறோம் என்றால் அதனை ஐபேடிலோ, ஆப்பிள் வாட்சிலோ முடிக்கலாம். 








9. ஊதா, நீலம் மற்றும் வெள்ளை ஆகிய ரிஸ்ட்பாண்ட்களுடன் ஆப்பிள் வாட்ச் வரவுள்ளது. மேலும் கையால் செய்யப்பட்ட கோல்ட் பக்கிளும் கூடுதல் கவர்ச்சி.



10. டிம் குக் இதனை "இதுவரை உருவாக்கப்படாத தனிநபர் பயன்பாட்டுக் கருவி" என்று இதனை டிம் குக் விதந்தோதுகிறார்.


















வாழ வேண்டுமென்று முடிவெடுத்த கணம்

வாழ வேண்டுமென்று முடிவெடுத்த கணம்

 

 

 

 

அது ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை. ஜனவரி 31,1993. எனது 18ஆவது பிறந்த நாளுக்குச் சில நாட்கள் இருந்தன. எங்கள் முகாமில் உள்ள ஒருவன் முந்தின நாள் இரவில் சுடப்பட்டான்.
பழிக்குப் பழி
என்னுடைய நண்பர்கள் இதற்கு முன்பு கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். எனினும், இறந்த மனிதனுடன் எனக்கு நல்ல நட்பு இருந்தது. அவனுடன் மட்டுமின்றி அவனைக் கொன்றவனுடனும் சேர்ந்தேதான் நான் வளர்ந்தேன். அந்த இரண்டு பேரும் எங்கள் பகுதியில் இரண்டு தரப்பினரின் பிரதிநிதிகள். நாங்கள் எல்லாரும் ஒன்றாகப் பள்ளிக்குப் போனோம். நாங்கள் எல்லாரும் ஏழாம் வகுப்பு முதலே ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொள்ளத் தொடங்கினோம்.
நான் மிகுந்த கோபம் கொண்டேன். எனது நண்பனின் கொலைக்குப் பழிதீர்க்க அவனது இறுதிச் சடங்கு வரை பொறுத்திருப்பது என்று நாங்கள் முடிவுசெய்தோம். எங்களது துப்பாக்கிகளுடன் தேவாலயத்துக்குச் சென்றோம். எதற்கும் தயாராக இருந்தோம்.
கொல்லப்பட்ட பையனின் அம்மா தனது சக்தியை எல்லாம் ஒன்றுதிரட்டி ஒரு மைக்ரோபோன் மூலம் எங்களிடம் பேசினாள். அவள் தன் மகன் உயிரோடு இருந்தபோது நடத்திய உரையாடலைப் பற்றி எங்களிடம் சொல்லத் தொடங்கினாள். உயிர் பிழைப்பதற்காக ஓடிக்கொண்டே இருப்பதில் களைப்பு ஏற்பட்டுவிட்டதாக அவன் கூறியிருக்கிறான். நேர்மையாக வாழ்வதற்குத் தயார் என்றும் கூறியிருக்கிறான். அத்துடன் தனது அம்மாவிடம் தனது துப்பாக்கியைக் கொடுத்து, இந்த முறை தான் சொன்னபடி உறுதியாக நடப்பேன் என்றும் வாக்குறுதி கொடுத்துள்ளான்.
தாயின் மன்னிப்பு
அவன் தாயின் கண்களில் கண்ணீரை நான் பார்த்தேன். அவள் அனுபவித்துக்கொண்டிருக்கும் வலியை உணர்ந்தேன். அதைவிட தனது மகனைக் கொன்ற அந்த வாலிபனை மன்னித்துவிட்டேன் என்று அவள் சொன்னபோது நான் மேலும் ஆச்சரியம் அடைந்தேன்.
எனக்கு திடீரென்று ஞானோதயம் ஏற்பட்டது! கொல்லப்பட்டவனின் சொந்தத் தாயே கொன்றவனை மன்னிக்கும்போது நண்பனுக்காகப் பழிவாங்கத் துடிக்கும் நான் யார் என்ற கேள்வி எழுந்தது.
அன்று இரவு நான் பாதிரியாரிடம் என் துப்பாக்கியைக் கொடுத்தேன். நான் இனிமேலும் அப்படியான வாழ்க்கையைத் தொடரப் போவதில்லை என்று கூறி உதவி கேட்டேன். மீண்டும் தெருக்களில் அலைந்து வம்பு வளர்க்காமல் இருப்பதற்கு எனக்கு ஒரு காரணம் தேவைப்பட்டது.
காதலில்…
அதற்கு அடுத்த நாளே எனது 18 ஆவது பிறந்த நாள் அன்று ஒரு இளம் பெண்ணைப் பார்த்தேன். அவள்தான் பல வருடங்கள் கழித்து எனக்கு மனைவியானாள். இந்தச் சிறு பெண்ணின் கள்ளமற்ற தன்மைக்கும் எனக்கும் நெடுந்தூரம். ஆனால் இருவரும் உடனடியாக ஈர்க்கப்பட்டோம். மிகக் குறுகிய காலத்தில் சிறந்த நண்பர்களாக மாறினோம். அவள் நடுத்தர வர்க்க மனிதர்கள் வாழும் பகுதியில் வாழ்ந்துவந்தாள். அவளுக்கு மிக அழகிய குடும்பம் இருந்தது.
நான் அவளைக் கவர விரும்பியதை நினைவுகூர்கிறேன். அதே நேரம் எனது இறந்த காலம், நிகழ் காலம் மற்றும் ஆபத்தான எதிர்காலத்திலிருந்து அவளைப் பாதுகாக்கவும் விரும்பினேன். அதனால் அவளுடன் இருக்கும் போதெல்லாம் வித்தியாசமாக நடக்கவும், பேசவும், உடை உடுத்தவும் தொடங்கினேன். நகரில் நாங்கள் வசிக்கும் பகுதிக்கு அவளை அழைத்துக்கொண்டு சென்றதே இல்லை. அவள் அபாயகரமான சூழநிலைக்குள் சிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்று அஞ்சினேன்.
எனது எதிர்காலம் குறித்து யோசிக்கத் தொடங்கினேன். நான் எங்கே செல்கிறேன்? இவளுடனான உறவு தீவிரம் அடைந்தால் இவளுக்கு என்னால் எதைத் தர இயலும்? எனது வாழ்க்கை முறையை மாற்றத் தொடங்கும் அளவுக்கு நான் அந்த உறவை மிகவும் மதித்தேன். வாழ்க்கையைக் கூடுதலாக விரும்புவதற்கான காரணத்தை அவள் எனக்குத் தந்தாள்.
என் வழியில் தடை
நான் எதிர்காலம் குறித்துச் சிந்தித்ததேயில்லை. உடனடியாக எனக்கு வியர்க்கத் தொடங்கியது. எனது இதயம் வேகமாகத் துடித்தது. அச்சம் என்னைப் பீடித்தது. பணம் சம்பாதித்து, ஒரு குடும்பத்தை அமைத்துக்கொள்வதைப் பற்றிய எண்ணம் வந்தபோதெல்லாம் நான் பீதியடைந்தேன். வாழ்க்கை போராட்டம் நிரம்பியது என்று குழந்தைப் பருவத்தில் எனக்கு ஏற்பட்ட முதல் பதிவை எதிர்காலத்தில் என் குழந்தைக்கு ஏற்படுத்த நான் விரும்பவில்லை. நான் வெற்றிகரமானவனாகத் திகழ வேண்டும் என்று முடிவெடுத்தேன்.
என்னிடம் புத்தம் புதிய மனப்பாங்கு உருவானது. நான் எனது இறந்த காலம் பற்றி இனியும் கவலைப்படப் போவதில்லை. எனது வழியில் யாரும் தடையாக நிற்க இனிமேல் அனுமதிக்கப்போவதில்லை. என் வழியில் இருந்து வெளியேற்ற வேண்டிய முதல் ஆள் நான்தான்!

 

வெறும்பேச்சும் தொடர்புடைய பேச்சும்

வெறும்பேச்சும் தொடர்புடைய பேச்சும் 

 

 

 

 

“இரவு மணி பத்து ஆகிவிட்டது. அந்த ட்ரையினை பிடித்தே ஆக வேண்டும்”. அவசரமாக ஓடி எப்படியோ கம்பார்ட்மெண்டுக்குள் நுழைந்து விட்டேன். கஷ்டப்பட்டு சீட்டைக் கண்டுபிடித்தேன். வாலிபர் ஒருவர் எனக்குரிய இடத்தில் உட்கார்ந்திருந்தார்.
சீட் தகராறு
காதில் “ஹெட்போனை” வைத்துக்கொண்டு தலையாட்டிக் கொண்டிருந்தார். அவர் கண் முன்னால் எப்படியாவது பட்டு விட வேண்டும் என்று ரொம்ப ட்ரை பண்ணி எதிரில் போய் நின்றேன். என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு கண்ணால் “என்ன வேண்டும்” என்று விசாரித்தார். நான் “சார் இது என்னோட இடம். நீங்க தவறுதலா உட்கார்ந்திருக்கீங்க”ன்னு சொன்னேன். உடனே கோபம் கொப்பளிக்க என்னை முறைத்தார். “அம் ஐ அன் இடியட்? திஸ் இஸ் மை சீட்” என்று சொல்லிவிட்டு விறைப்பாய் ஜன்னலோரம் திரும்பிக்கொண்டார். “சார் ப்ளீஸ் இது என்னோட சீட். நம்பர் B 2 முப்பது” என்றேன். அவர் உடனே “ஹலோ, எந்தும் முப்பது மேன்” என்றார் “உங்க டிக்கெட் காட்ட முடியுமா” என்றேன். “நீ என்ன பெரிய டிக்கெட் செக்கரா டிக்கெட் எல்லாம் கேக்கற” என்று கத்தினார். நான் “டிக்கெட் காட்டுங்க ப்ளீஸ்” என்றேன். வேண்டா வெறுப்பாய் காண்பித்தார். அதில் B 3 முப்பது என்றிருந்தது.
கருணாஸ் காமெடி
“ஆமாம். அடடா சாரி சார்” என்று காலில் விழாத குறையாக சொல்லி அசடு வழிந்தார். என்னுடைய பெட்டியையும் அவரே வாங்கி வைத்தார். மற்றவர்களுக்கு காதில் விழுகிற மாதிரி பல தடவை சாரி சொன்னார். அமைதியாக இடத்தைக் காலி செய்தார். நானும் கத்தி இருந்தால் கருணாஸ் காமெடி மாதிரி ஆகியிருக்கும். நான் அந்த இடத்திற்கு தேவையான ரியாக் ஷனைக் கையாண்டேன்.
இது அன்றாடம் நிறையப் பேருக்கு நடப்பதுதான். அந்தந்தத் தருணங்களில் நாம் எடுக்கும் எமோஷனலான முடிவுகள்தான் பல பிரச்சினைகளுக்கும் காரணம்.
மென்திறன்னா?
“மென் திறன் அப்படின்னாலே இங்க்லீஷ் பேசணும், ஆபிஸ்ல எப்படி இருக்கணும் , சொசைட்டில எப்படி நடந்துக்கணும், இதுதானே! இது எங்களுக்கு தெரியாதா? மேலை நாடுகள்தான் இந்தப் பயிற்சியை அறிமுகப்படுத்தி நிறைய காசு பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. இந்தியாவிலேயும் வந்தாச்சா? இதெல்லாம் தேவையே இல்ல”ன்னு நீங்க நினைக்கறீங்க.
இன்றைக்கு ஒரு பட்டனைத் தட்டிவிட்டா அமெரிக்கால இருக்கிறவர் கூட ஜாலியாப் பக்கத்து் வீட்டுகாரர்கிட்டப் பேசற மாதிரி பேச முடியுது. ஆனா பேசற நேரத்தில் சுருக்கமாகவும் தெளிவாகவும் பேசணும். மூணு நிமிஷ ஸ்கைப் ல மூவாயிரம் விஷயம் சொல்ல வேண்டி இருக்கு. அந்த கொஞ்ச நேரம் பேசறதுக்கே சுருங்க சொல்லி புரிய வைக்கணும். நாம மனிதர்களை விட எந்திரங்கள் கூடத்தான் அதிகம் பேசறோம். அப்படி ஒரு எந்திரத்தனமான வாழ்வில் மென் திறன் அவசியமானதே.
உறவுகளுக்கான பேச்சு
நாம் தன்மையாக ஆழ்மனதிலிருந்து பேசுவதை இழந்து வெகு நாட்கள் ஆகி விட்டது. எப்போது பேசும் தன்மை குறைகிறதோ நாம் சொல்ல வந்த கருத்தை பிறரிடம் சொல்ல முடியாமல் போகிறது. நாம் சிந்தித்துச் செயல்படுவதைக் காட்டிலும் சினம் கொண்டு செயல்படுவதைத்தான் பெரிதும் விரும்புகிறோம். எதற்கெடுத்தாலும் உடனுக்குடன் முடிவெடுத்து எடுத்தோம் கவிழ்த்தோம் என உறவுகளின் பலம் அறியாமல் செய்து விடுகிறோம். சந்தோஷமாக இருக்கும்போது வாக்குகளை அள்ளி விடுவதும், சோகமாக இருக்கும்போது தவறான முடிவுகள் எடுப்பதும் நமக்கு கை வந்த கலை.. சராசரியாகக் கூட பிறரிடம் சிரித்துப் பேச முடிவதில்லை.
இங்கிலிஷில் பேசிவிட்டால் உறவுகள் வந்துவிடாது. எந்த மொழி ஆனாலும் மற்றவரிடம் தொடர்பு ஏற்படுகிற மாதிரி பேசும் திறன் இருந்தால்தான் உறவுகள் பலப்படும்.
கண்டேன் சீதையை
சீதையைத் தேடிச் சென்று கண்டுபிடித்துவிட்ட அனுமன் அதை ராமரிடம் சொல்ல வருகிறார். சொல்கின்ற ஒரு வார்த்தையில் அத்தனையும் சொல்லி ஆக வேண்டும். அவர் சொல்லிய வரிகள் இன்றளவும் இலக்கிய உலகில் மிகவும் பிரபலம். “கண்டேன் சீதையை”. இந்த ஒரு வரியில் ராமர் மெய் மறந்தார். வெறும் பேச்சுக்கும், , தொடர்புடைய பேச்சுக்கும் அதிக வித்தியாசம் உண்டு.
இன்று ஒரு தரம் பார்த்த மனிதரை ஒரு வருடம் கழித்து பார்க்கிறோம். தொலைபேசி, ஸ்கைப், வாட்ஸ் அப் என பல தொடர்பு வழிகள். “குட் மார்னிங்” என இந்தியாவில் இருந்து சொல்லும்போதே ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு டைமிங். இந்த எல்லா விஷயங்களையும் ஆட்கொள்ள மென் திறன் அவசியமாகிறது.
எதிர் நீச்சல்
மென்திறன் என்பது நடைமுறை சார்ந்த விஷயம்தான். அதை அன்னியனா பாக்காம , ரெமோவா பாருங்க. அப்பதான் நீங்க அதைக் காதலிப்பிங்க. “ஐயய்யோ” இதைக் காதலிக்கலைன்னா நம்ம லைப் போச்சா என்று பயத்தோடப் பார்த்தால் அதுவே ஒரு வேதாளமாகி முதுகில் தொங்கிக் கொண்டிருக்கும்.
சமூகத்தின் இந்த புதிய ஆடுகளத்தில் எதிர் நீச்சல் போடணும்னா , அகடெமிக் திறனும், மென் திறனும் ரெட்டைக் குழல் துப்பாக்கின்னு தெரியனும். வெரி இன்ஸ்பைரிங் பர்சனாலிட்டி ன்னு எல்லாரும் உங்களைச் சொல்லணும்னா மென் திறனாளி ஆகுங்கள்.