Friday, 9 January 2015

மனவெழுச்சியின் பக்குவம்

 
 
 
எந்த ஒரு தனிநபரின் ஆளுமை வளர்ச்சிக்கும் அவர் தன்னிடம் எழக்கூடிய மனவெழுச்சிகளைக் கட்டுப்படுத்தும் தன்மையைப் பெற்றிருக்கிறாரா என்பது இன்றியமையாதது. கட்டுப்படுத்துதல் என்பது உணர்ச்சிகளை மழுங்கடித்தல் அல்ல. உணர்ச்சிகள் இல்லாமல் இருத்தல் என்பதும் அல்ல.

மாறாக உணர்ச்சிகளைச் சிறப்பாகக் கையாளுவதுதான். இதனை மனவெழுச்சிப் பக்குவம் எனலாம். மனவெழுச்சி முதிர்ச்சி என்றும் சொல்லலாம். 

மனவெழுச்சி என்பது உணர்வுகள் மேலோங்கி இருக்கும் ஒரு நனவு நிலையாகும். மகிழ்ச்சி, துக்கம், அன்பு, கருணை, அருவருப்பு, பயம் போன்ற உணர்ச்சிகள் மனிதர்களிடையே தோன்றும் மனவெழுச்சிகள் ஆகும். இவற்றைப் பொருத்தமான நேரத்தில் பொருத்தமான வகையில் வெளிப்படுத்தக் கற்றுக்கொண்டு உணர்ச்சிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் மனவெழுச்சியில் பக்குவப்பட்டவர் ஆகிறார்.

எவன் ஒருவன் அனைத்திலும் பற்று வைக்காமல் அந்தந்த நல்ல அல்லது கெட்ட பொருளை அடைந்து மகிழ்வதுமில்லையோ வெறுப்பதுமில்லையோ அவனுடைய புத்தி ஸ்திரமானது என்று மனவெழுச்சிப் பக்குவத்தைப் பற்றி பகவத்கீதை கூறுகிறது. 


ஒரு நாடு அல்லது ஒரு அமைப்பிலுள்ள தனி நபர்களின் மனவெழுச்சி பண்படும்போது அந்த அமைப்பு ஒத்திசைவான வளர்ச்சியையும் செழுமையையும் பெறுவது திண்ணம். 

தென்னாப்பிரிக்காவில் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த வழக்கறிஞரை நிறப்பாகுபாட்டின் காரணமாக மூட்டை முடிச்சுகளோடு வெளியே தள்ளினார்கள் வெள்ளையர்கள். அந்த வழக்கறிஞரின் உணர்வுகள் மரத்துப்போகவும் இல்லை. மறந்து போகவும் இல்லை. அந்த வழக்கறிஞர் பின்னாளில் பன்முகத்தன்மை கொண்ட இந்தியத் தேசத்தை உருவாக்கி தேசப்பிதாவாக உயர்ந்தார். 

காந்தியடிகள் காட்டிய வழியைப் பின்பற்றி மேன்மை பெற்ற வெளிநாட்டவர்களில் நெல்சன் மண்டேலா, மார்ட்டின் லூதர் கிங் ஆகியோர் உலகால் அறியப்பட்ட ஆளுமைகள். 

மனவெழுச்சிகளைத் திறம்படக் கையாளும்போது இக்கட்டான சூழ்நிலையிலும் தீர்க்கமான முடிவுகளை எடுத்தல், மற்றவர்களுக்கு உதவுதல்,ஒத்துழைத்தல், நிதானமாக நடந்துகொள்ளுதல் போன்ற திறன்கள் வலுப்பெறும்.

No comments:

Post a Comment