திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் 10 வருடங்களுக்கு முன்னால் நான்தான்
மைக் மோகன். பள்ளிப் பருவத்திலும் பாட்டுப் போட்டியில் எனக்குத்தான் முதல்
பரிசு.
கல்லூரியில் முதலாம் வருடத்திலேயே திருச்சியில் உள்ள பிரபலமான இசைக்
குழுக்களில் பாட ஆரம்பித்து விட்டேன். என் பேராசிரியர்கள் ஆதரவோடு
“ஜெயஸ்ருதி” என்ற பெயரில் இசைக் குழுவும் நடத்தினேன்.
கல்லூரிகளுக்கு இடையே நடக்கும் பாட்டுப் போட்டியில், வருடம் தோறும் எங்கள்
கல்லூரியின் சார்பில் நானும் என் நண்பன் முத்துவும் கலந்து கொள்வோம்.
மூன்று முறையும் அந்தப் போட்டிகளில் நான்தான் முதல் பரிசு. என் நண்பன்
முத்து பரிசு பெறவில்லை.
ஆனால், எங்கள் கல்லூரியில் துறைகளுக்கு இடையே நடக்கும் போட்டியில் நான் முதல் பரிசு. முத்து இரண்டாம் பரிசு.
முத்து ஹாஸ்டல் ரூம்ல காலையில் ஒரு ஹார்மோனியத்த வச்சிகிட்டு
சா.......பா......ஸா....... னு சாதகம் செய்வான். மாலையில் பாட்டு கத்துக்க
எங்கேயோ போவான்.
எங்க ஹாஸ்டல்ல 20 பாத்ரூம் ஒண்ணா இருக்கும். அத்தனைக்கும்
மொத்தமா அவன்தான் ஆல் இண்டியா ரேடியோ.
பாத்ரூமில் ஷவரைத் திறந்து விட்டுட்டு ஆ......ஊ........னு கத்துவான்.
எவ்வளவு கிண்டல் பண்ணாலும் அவன் செய்றதத்தான் செய்வான். வெட்கப்படவே
மாட்டான்.
திருச்சியில் இருக்கும் ஓர் இசைக்குழுவில் சேர்ந்து விட்டதாக ரொம்ப பெருமிதமா என்னிடம் வந்து ஒரு நாள் சொன்னான்.
அந்தச் சமயம் நான் இசைக் குழுக்களில் பாடுவதையே நிறுத்திவிட்டேன். ஒரு
உள்ளூர் தொலைக்காட்சியில் ஒரு பேட்டிக்காக அழைத்தார்கள். அதற்கும்
போகவில்லை. முத்து மட்டும் தொடர்ந்து சின்னச் சின்ன முயற்சிகளைச் செய்து
கொண்டே இருந்தான்.
மூன்றாம் ஆண்டு இறுதியில் ஒரு நாள் காலை. கல்லூரியின் நோட்டீஸ் போர்டு
அருகே செமக் கூட்டம். கூட்டத்தை முண்டிக்கொண்டுப் போய் பார்த்தேன்.
“திருச்சியின் சிறந்த பாடகராய் முத்து தேர்ந் தெடுக்கப்பட்டார்” என்ற
செய்தி. முத்து கையில் மைக் வைத்துப் பாடிக் கொண்டிருப்பதுபோல் புகைப்படம்
தாங்கிய பல நியூஸ் பேப்பர் கட்டிங்குகள் ஒட்டப்பட்டிருந்தன.
நெஞ்சுகுள்ள
ராவா ஆசிட் ஊத்தி விட்டது போலாயிடுச்சி எனக்கு.
சிறந்த பாடகரைத் தேர்வு செய்யப் போவதாய் ஒரு கிளப் விளம்பரம் செய்ததை
நானும் பார்த்தேன். ஆனால் கண்டுகொள்ளவில்லை. அவ்வளவு அலட்சியம் எனக்கு.
இந்தப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றால் இவ்வளவு பெரிய அங்கீகாரம்
கிடைக்கும் என நினைக்க வில்லை.ஆனால் அதை ஒரு வாய்ப்பாக அடையாளம் கண்டு
முத்து ஜெயித்திருக்கிறான்.
மூன்று வருடமா கேம்பஸ் ஹீரோவா இருந்த என்னை, முத்து ஒரே நாளில் காலி
பண்ணிட்டான்.
உண்மையில் என் புகைப்படம் அது போல் நியூஸ் பேப்பரில்
வரவேண்டும் என்பது என் மிகப்பெரிய கனவு. ஆனால் எந்த முயற்சியும் இல்லாம
வெறும் கனவை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும்?
இதெல்லாம் நடந்து முடிந்து மீண்டும் கல்லூரி அளவில் நடந்த பாட்டுப்
போட்டியில் நான் முதல் பரிசு பெற்றேன்.
முத்து இந்த முறையும் இரண்டாம்
பரிசுதான்.ஆனாலும் “திருச்சியின் சிறந்த பாடகர்” பட்டம் பெற்றது
முத்துதான்.
வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறான் முத்து. தகுதியிருந்தும் ஒரு
நல்ல வாய்ப்பைத் தவற விட்டிருக்கிறேன் நான்.
எந்தத் துறையை எடுத்துக்
கொண்டாலும் ஜெயிப்பவர்கள் எல்லோரும் சிறிய சிறிய விஷயங்களில் மிகக் கவனமாக
இருந்திருக்கிறார்கள்.
வாய்ப்பு , திறமை, எல்லாம் சம அளவில் இருந்தாலும் சிலர் சின்னச் சின்ன
விஷயங் களில் கூடுதல் கவனம் செலுத்தி முந்திவிடுகிறார்கள்.
சில கால
இடைவெளிக்குப் பின் இவர்கள் மிகப் பிரம்மாண்டமாய் எழுகிறார்கள்.
உண்மையில் பிரம்மாண்டமென்பது சின்னச் சின்ன காரியங்களில் காட்டப்படும்
நேர்த்தியே தவிர வேறொன்று மில்லை.
இதைப் புரிந்து கொண்டு செயல்பட
ஆரம்பிக்கும் எவரும் பிரம்மாண்டமானவராக ஆகலாம்.
ஏ.வி. எம் ஸ்டுடியோ என்ற சாம்ராஜ்ஜியத்தை நிறுவிய ஏ.வி.மெய்யப்பன் மரணப்
படுக்கையின் கடைசி நிமிடங்களில் “ ஏன் லைட் வீணாக எரிகிறது? அதை
அணையுங்கள்” என்றாராம்.
தங்கள் வாழ்க்கையை வரலாறாக மாற்றியவர்கள் ஏதோ ஒரு விதத்தில் தங்களை ஒழுங்கு
செய்து கொண்டிருக்கிறார்கள். ஏ.வி.மெய்யப்பனைப் போல! முத்துவைப் போல!
No comments:
Post a Comment