Monday, 24 November 2014

உயிர்களின் தோற்றத்தை அறிவித்தவர்

உயிர்களின் தோற்றத்தை அறிவித்தவர்

 

சர்வதேச பரிணாம வளர்ச்சி நாள்: நவம்பர் 24 
 
டார்வின் (1809 - 1882) இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர். பரம்பரையாக டாக்டர்களாக இருந்த குடும்பத்தில் அவர் பிறந்தார். டார்வினும் மருத்துவம் படித்துக்கொண்டிருந்தபோது ஒருமுறை ஒரு குழந்தைக்கு அறுவை சிகிச்சை நடப்பதைப் பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போதெல்லாம் மயக்க மருந்தின்றி அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டதால் அந்தக் குழந்தை பட்ட வேதனையைக் கண்டும், கேட்டும் மருத்துவத்தின்மீது இருந்த ஆர்வத்தை அவர் இழந்தார். டார்வின் அப்பாவிடம் டாக்டராகத் தனக்கு விருப்பமில்லை என மறுத்து விட்டார். 

ஆய்வு நூல்
 
சிறுவயதிலேயே அவருக்கு உயிரினங்களை ஆய்வு செய்வது பிடித்தது.22வயதில் அமெரிக்க , ஐரோப்பியத் தீவுகளுக்கு கப்பலில் சென்றார். ஐந்து ஆண்டுகள் ஆய்வுசெய்தார்.அதை நூலாக வெளியிட்டார். உயிரினங்களின் தோற்றம் எனும் டார்வினின் புத்தகம் 1859-ல் இதே தேதியில்தான் வெளியானது. 

அவர் வெளியிட்ட நூல்களில் உயிரினங்களின் தோற்றம் எனும் இந்த நூல்தான் மிகப்பெரிய விவாதத்தை கிளப்பியது. இயற்கையோடு ஒன்றிப்போகிற உயிரினங்கள் வாழ்வதையும், மற்றவை மறைந்து போவதையும் இந்தப் போராட்டத்திலிருந்து புதிய உயிரினங்கள் தோன்றுவதையும் அவர் இந்த நூலில் விளக்கினார். மாறும் சூழலுக்கேற்ப தகவமைத்துக் கொள்ளும் உயிரினங்கள் தப்பிப்பிழைத்து வாழ்ந்து மேலும் மேலும் சிறந்தவையாக வளர்ச்சி அடையும் என்பது அவரது ஆய்வின் மையம். 

பரிணாம வளர்ச்சி நாள்
 
அப்படியானால் அது மனிதனுக்கும் பொருந்த வேண்டுமே என உலகம் உணர்ந்தது. நாம் குரங்கிலிருந்து பிறந்தோமா? எனும் கேள்விகள் எழத் தொடங்கின. இத்தகைய விவாதத்தையே அன்றைய கிறிஸ்துவ மத தலைமையான போப் ஆண்டவர் கண்டித்தார். இந்தப் புத்தகத்தின் 1250 பிரதிகளும் ஒரேநாளில் விற்றுவிட்டன. அதன்பிறகு மற்ற பல மொழிகளில் அது மொழியாக்கம் ஆகத் தொடங்கியது. அவர் வாழ்ந்த போதே அவரது நூல் உலகம் முழுவதும் பதிப்பிக்கப்பட்டது. 

அவரது நூல் பல பதிப்புகள் கண்டது. 1872-ல் ஆறாவது பதிப்பு வெளியானபோதுதான் அதில் பரிணாம வளர்ச்சி என்ற சொல்லை டார்வின் சேர்த்தார். டார்வினின் பிறந்த நாள் ஒரு சர்வதினமாகக் கொண்டாடப்பட்டாலும் இந்தப் புத்தகம் வெளியான நாளும் பரிணாமவளர்ச்சி நாள் எனத் தனியாகக் கொண்டாடப்படுகிறது. 

அவரது அடுத்த புத்தகம்தான் மனிதனின் தோற்றத்தைப் பற்றிப் பேசுகிறது. மண்ணின் வளத்துக்கும், பயிர் வளர்ப்புக்கும் முக்கியக் காரணம் மண்புழுக்கள்தான் என்பதையும் டார்வின்தான் தெளிவுபடுத்தினார்.
டார்வின் 1882 ஏப்ரல் 19-ல் இறந்தார்.

 

No comments:

Post a Comment