Monday, 24 November 2014

உயிர்களின் தோற்றத்தை அறிவித்தவர்

உயிர்களின் தோற்றத்தை அறிவித்தவர்

 

சர்வதேச பரிணாம வளர்ச்சி நாள்: நவம்பர் 24 
 
டார்வின் (1809 - 1882) இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர். பரம்பரையாக டாக்டர்களாக இருந்த குடும்பத்தில் அவர் பிறந்தார். டார்வினும் மருத்துவம் படித்துக்கொண்டிருந்தபோது ஒருமுறை ஒரு குழந்தைக்கு அறுவை சிகிச்சை நடப்பதைப் பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போதெல்லாம் மயக்க மருந்தின்றி அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டதால் அந்தக் குழந்தை பட்ட வேதனையைக் கண்டும், கேட்டும் மருத்துவத்தின்மீது இருந்த ஆர்வத்தை அவர் இழந்தார். டார்வின் அப்பாவிடம் டாக்டராகத் தனக்கு விருப்பமில்லை என மறுத்து விட்டார். 

ஆய்வு நூல்
 
சிறுவயதிலேயே அவருக்கு உயிரினங்களை ஆய்வு செய்வது பிடித்தது.22வயதில் அமெரிக்க , ஐரோப்பியத் தீவுகளுக்கு கப்பலில் சென்றார். ஐந்து ஆண்டுகள் ஆய்வுசெய்தார்.அதை நூலாக வெளியிட்டார். உயிரினங்களின் தோற்றம் எனும் டார்வினின் புத்தகம் 1859-ல் இதே தேதியில்தான் வெளியானது. 

அவர் வெளியிட்ட நூல்களில் உயிரினங்களின் தோற்றம் எனும் இந்த நூல்தான் மிகப்பெரிய விவாதத்தை கிளப்பியது. இயற்கையோடு ஒன்றிப்போகிற உயிரினங்கள் வாழ்வதையும், மற்றவை மறைந்து போவதையும் இந்தப் போராட்டத்திலிருந்து புதிய உயிரினங்கள் தோன்றுவதையும் அவர் இந்த நூலில் விளக்கினார். மாறும் சூழலுக்கேற்ப தகவமைத்துக் கொள்ளும் உயிரினங்கள் தப்பிப்பிழைத்து வாழ்ந்து மேலும் மேலும் சிறந்தவையாக வளர்ச்சி அடையும் என்பது அவரது ஆய்வின் மையம். 

பரிணாம வளர்ச்சி நாள்
 
அப்படியானால் அது மனிதனுக்கும் பொருந்த வேண்டுமே என உலகம் உணர்ந்தது. நாம் குரங்கிலிருந்து பிறந்தோமா? எனும் கேள்விகள் எழத் தொடங்கின. இத்தகைய விவாதத்தையே அன்றைய கிறிஸ்துவ மத தலைமையான போப் ஆண்டவர் கண்டித்தார். இந்தப் புத்தகத்தின் 1250 பிரதிகளும் ஒரேநாளில் விற்றுவிட்டன. அதன்பிறகு மற்ற பல மொழிகளில் அது மொழியாக்கம் ஆகத் தொடங்கியது. அவர் வாழ்ந்த போதே அவரது நூல் உலகம் முழுவதும் பதிப்பிக்கப்பட்டது. 

அவரது நூல் பல பதிப்புகள் கண்டது. 1872-ல் ஆறாவது பதிப்பு வெளியானபோதுதான் அதில் பரிணாம வளர்ச்சி என்ற சொல்லை டார்வின் சேர்த்தார். டார்வினின் பிறந்த நாள் ஒரு சர்வதினமாகக் கொண்டாடப்பட்டாலும் இந்தப் புத்தகம் வெளியான நாளும் பரிணாமவளர்ச்சி நாள் எனத் தனியாகக் கொண்டாடப்படுகிறது. 

அவரது அடுத்த புத்தகம்தான் மனிதனின் தோற்றத்தைப் பற்றிப் பேசுகிறது. மண்ணின் வளத்துக்கும், பயிர் வளர்ப்புக்கும் முக்கியக் காரணம் மண்புழுக்கள்தான் என்பதையும் டார்வின்தான் தெளிவுபடுத்தினார்.
டார்வின் 1882 ஏப்ரல் 19-ல் இறந்தார்.

 

Wednesday, 12 November 2014

புது பாஸ்போர்ட்டுக்கு ஆதார் அவசியம்: மத்திய வௌியுறவுத்துறை முடிவு

புது பாஸ்போர்ட்டுக்கு ஆதார் அவசியம்: மத்திய வௌியுறவுத்துறை முடிவு

 

 

 

புதுடில்லி: புதிய பாஸ்போர்ட்டுகள் வழங்க, ஆதார் அட்டையை அடையாளமாக பயன்படுத்த மத்திய அரசின் வௌியுறவுத்துறை முடிவு செய்துள்ளது. இதன் மூலம், புதிய பாஸ்போர்ட் எடுக்க விரும்புபவர்களுக்கு ஆதார் கட்டாயமாகிறது.

தற்போதைய நடைமுறையின்படி, புதிய பாஸ்போர்ட் பெற குடும்ப அட்டை, இருப்பிட சான்றிதழ், போலீஸ் வெரிபிகேஷன் ஆகியவை அவசியமாக உள்ளது. இந்த நடைமுறையின் கீழ், விண்ணப்பதாரர்கள் பாஸ்போர்ட்டை பெற கால தாமதமாவதாகவும், குறிப்பாக, போலீஸ் வெரிபிகேஷனுக்காக விண்ணப்பதாரர்கள் பல நாட்கள் காத்துக் கிடக்க வேண்டியுள்ளது என்றும் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, பாஸ்போர்ட் மற்றும் விசா வழங்கும் நடைமுறையில் சில மாற்றங்களை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஆதார் அட்டை அவசியம்:

புதிய பாஸ்போர்ட் வழங்குவதற்கு ஆதார் அட்டையை கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசின் எந்த ஒரு சலுகை அல்லது சேவையை பெறவோ, ஆதார் அட்டையை கட்டாயமாக்க கூடாது என்று சுப்ரீம் கோர்ட் கூறி உள்ள நிலையிலும், பாஸ்போர்ட் வழங்குவதில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்க மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பாஸ்போர்ட் வழங்குவதற்கான புதிய நடைமுறை குறித்து உள்துறை, சட்டத்துறை ஆகியவற்றின் கருத்து கேட்கப்பட்டு, பின்னர் பிரதமர் மோடியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. ஆதார் அட்டை அவசியம் என்ற நிலையில், அது இல்லாதவர்கள், அது குறித்த தங்களின் பதிவு செய்த எண்ணை விண்ணப்பத்தில் குறிப்பிட்டால் போதும் என்று சலுகை காட்டப்பட்டுள்ளது.

விரைவான சேவை:

தற்போதைய நடைமுறையில், பாஸ்போர்ட் கோரும் விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களுக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர், அது குறித்த அறிக்கை பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு கொடுக்கப்படும், இந்த அறிக்கை கிடைத்த ஒருவாரத்திற்குள் விண்ணப்பதாரர்களுக்கு பாஸ்போர்ட் அனுப்பி வைக்கப்படும். புதிய நடைமுறையின் கீழ், ஆதார் அட்டையில் கொடுக்கப்பட்டுள்ள முகவரி மட்டும், போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பி வைக்கப்படும். இதற்கிடையில், விண்ணப்பதாரர்களின் உறுதியளிப்பின் அடிப்படையில், பாஸ்போர்ட் உடனடியாக அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அவர்கள் வௌிநாடு பயணம் மேற்கொள்வதற்குள், போலீஸ் வெரிபிகேஷன் முடிக்கப்படும். ஒருவேளை, விண்ணப்பதாரர் குற்றச் செயலில் ஈடுபட்டிருந்தாலோ, தவறான தகவலை கொடுத்திருந்தாலோ, பாஸ்போர்ட் ரத்து செய்யப்படும்.

Tuesday, 11 November 2014

சாப்பிடுவதற்கு மட்டுமா மீன்கள்?

சாப்பிடுவதற்கு மட்டுமா மீன்கள்?

பனிச்சிகர உச்சி, குகை நீருற்று, அலைகடல், குளிர்ந்த. இருண்ட. அசைவற்ற ஆழ்கடல் என எல்லா நீர்நிலைகளிலும் மீன்கள் வாழ்கின்றன. எந்த உயிரினமும் வாழ இயலாத சாக்கடலில்தான் மீன்கள் இல்லை.
மீன் நானுாறு கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய உயிரினம்-அழகான வடிவம் கொண்ட நீருயிரி-உடலின் அமைப்புக்குப் பொருந்தாத சற்றுப் பெரிய கண்களோடு இருக்கும். உலகம் முழுவதும் விரும்பி உண்ணப்பட்டும் வளர்க்கப்பட்டும் வரும் சிற்றுயிரி. 

மூளைக்கு வலிமை 

மீன்களில் இருபதாயிரம் இனங்கள் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.தாடை இல்லாதவை, தாடை உள்ளவை என அவை பிரிக்கப்பட்டுள்ளன. தாடை இல்லாத வகையில் வட்ட வாயுள்ள ஒரு பிரிவைத் தவிர மற்றவை எப்போதோ அழிந்து அற்றுவிட்டன. தாடை உள்ளவற்றில் குருத்தெலும்பு மீன்கள், எலும்பு மீன்கள் என இரு வகைகள் உள்ளன. சுறா, திருக்கை போன்றவை குருத்தெலும்பு மீன்கள்.கெண்டை, விரால் போன்றவை எலும்பு மீன்கள். 

மாமிசத்தைவிட மீன் உணவு எளிதில் செரிக்கக்கூடியது. மூளைக்கு வலிமை கொடுக்கும். புரதமும் நல்கொழுப்பும் வைட்டமின்கள் ஏ,டீ ஆகியவையும் உள்ளன. கால்சியம், சோடியம், அயோடின் போன்றவை உள்ளன. பால்சுறா போன்றவை நோயாளிகளுக்கும் பாலுாட்டும் தாய்மாருக்கும் சத்துணவாகக் கருதப்படுகிறது. 

வேறொரு கோணம்
 
சாப்பிடுவதற்கு மட்டுமல்ல மீன்கள். மீன் முள், செதில் கொண்டு கோழித்தீவனம் மற்றும் உரம் தயாரிக்கப்படுகிறது. மீன் தசையிலிருந்தும், ஈரலில் இருந்தும் எடுக்கப்படும் மீன் எண்ணெய் மாரடைப்பைத் தடுக்கும் தடுப்பு மருந்தாகப் பயன்படுகிறது. 

மீன் பஜ்ஜி, குழம்பு, வறுவல் போன்ற உணவுப்பொருள்கள் செய்யும்போது வெளியேற்றப்படும் கழிவுகளும் வீணாவதில்லை.அவற்றை அப்படியே மக்கவைத்து எருவாக்கி மீன் உரம் ஆக்குவர், மீன் எண்ணெய் தயாரிக்கும்போது கழிவாகக் கிடைக்கும் புண்ணாக்கு சிறந்த இயற்கை உரமாகும்.கார், ஹடாக், ஹேக்,போலக் ஆகிய மீன்களில் இருந்து, அவற்றின் தோல், எலும்பு, துடுப்புகளில் இருந்து தகுந்த முறையில் பக்குவப்படுத்தி “மீன் கோந்து” தயாரிப்பர். 

அது நல்லதொரு ஒட்டுப்பசையாகப் பயன்படுகிறது.கார்ப், கெளுத்தி, காட், ஹேக் மீன்களின் காற்றுப்பையின் உட்சுவர்களிலிருந்து ஐசிங் கிளாஸ் எனும் துாய ஜெலாட்டின் பொருள் பெறப்படுகிறது.வினிகர் போன்றவற்றைத் தெளிய வைக்கவும், சிலவகை சிமெண்ட் தயாரிப்பிலும் அது பயன்படுகிறது.ரஷ்யாவில் பல சிறப்பின ஸ்டர்ஜியன் மீன்களின் காற்றுப்பையிலிருந்து பெறும் ரஷ்ய ஐசிங் கிளாஸ் முதல் தரமானதாக உள்ளது. 

சுறா,திருக்கை மீன்களின் தோல் பலவழிகளில் பயன்படுகிறது. முட்செதில்கள் அடர்ந்த தோலானது, தச்சர்கள், பெட்டிகள் செய்வோர், மரக்கட்டைகளைப் பளபளப்பு ஏற்ற பயன்படுகிறது. உலோக வேலைப் பொருட்கள் தயாரிப்போர்,பாலிஷ் ஏற்ற அந்தத் தோலைப் பயன்படுத்து கின்றனர்.நல்ல முறையில் தயாரித்து, சாயம், மெருகு ஏற்றிய மீன்தோல் “ஷக்ரீன்” எனப்படும். 

நகைப்பெட்டிகள், வாள்உறைகள் செய்ய அது உதவுகிறது.செதில்களை அகற்றி சிறப்பாகப் பதனிட்ட சுறா, திருக்கைகளின் தோல் நீடித்து உழைக்கும் வார் போல உதவுகிறது. உப்பிய பேத்தை மீனின் உலர்ந்த தோல் ஜப்பானில் விளக்கு செய்ய உதவுகிறது. ப்ளீக் வகை மீனின் செதில்களிலிருந்து சுரண்டியெடுத்த வெள்ளிநிறமிகளை, உட்குழிவான கண்ணாடி மணிகளில் பூசி, மெழுகால் நிரப்பி, செயற்கை முத்துக்கள், ஐரோப்பா கண்டத்தில் பரவலாகத் தயாரிக்கப்பட்டுப் பிரபலமாகி வருகின்றன. 

தென்கடல் தீவுப் பழங்குடியினர் பேத்தை மீனின் (க்ளோப் ஃபிஷ்) முட்கள் நிறைந்த தோலைக் காயவைத்துப் போர்க்காலத் தலைக் கவசம் செய்கின்றனர்.காட், ப்ரீம் போன்ற எலும்பு மீன்களின் தோலிலிருந்து வார் தயாரித்து சித்திர வேலைப்பாடுகளுக்கு பயன்படுத்துகின்றனர். மீன் துாளின் கொழுப்புப் பகுதியை அகற்றி எஞ்சியதை உலர்த்திப் பெறும் சுத்தமான மீன் புரதம் மிகச்சிறந்த அறிவியல் பொருள். கேக்,ஐஸ்க்ரீம், விலை உயர்ந்த மருந்துகள் தயாரிப்பில் அது பயன்படுகிறது.அதில் மீன் வாடையே இருக்காது.
கரையக்கூடிய மீன்புரதம் வெள்ளை நிறம். மீன்தோல், கைப்பை, நகைப்பெட்டிகள் தயாரிக்க உதவுகிறது.இயற்கையிலேயே மீன்தோல் நெகிழ்வுத் தன்மை கொண்டது.